நவக்கிரக கோவில்கள்


நலம் அருளும் நவக்கிரக நாயகர்கள் தனிக் கோயில் கொண்டு அருளும் நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

   நவக்கிரக நாயகர்கள் வழிபட்டு தம் பாவங்கள் தீர்த்த "திருமங்கலக்குடி"

 நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் " திருமங்கலக்குடி ". இத் தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலாவராக " பிராணவரதேஸ்வரரும்". அம்பாளாக " மங்கள நாயகியும் " அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என " பஞ்ச மங்கல ஷேத்ரமாக" வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற புண்ணிய பூமி இது."

 சூரியபகவான், உஷா தேவி, சாயா தேவியுடன் அருளும் "சூரியனார் கோயில்"


கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரிய பரிகார தலமான " சூரியனார் கோவில் ". மேற்கு நோக்கி அமைந்துள்ள இத் திருக் கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும் , நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக " சூரிய தேவன் " இடப் புறம் உஷா தேவியுடனும், வலப் புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர்.

  முக்கண்ணனின் இடது கண்ணான சந்திர பகவான் அருளும் "திங்களூர்"

கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுகுரிய தலமான " திங்களூர் ". தஞ்சவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்கல்ளில் ஒருவரான " அப்பூதி அடிகளார் " வாழ்ந்த தலம் இது. அம்புலி, இந்து, கலாநிதி, குமுத சகாயன், சசாங்கதன், கதிர், நிலா, மதி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சந்திரன் சிவ பெருமானின் முக்கண்ணில் இடது கண்ணாக விளங்குபவர். சாத்வீக குணம் கொண்ட இவர் ஒரு சுப கிரகர். பராசக்தியின் அம்சமான இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம். கடக ராசிக்கு அதிபதியான இவர் உயிர்களிடத்து மோக குணத்தை தூண்டுபவர். இவர் ஒருவரது ஜாதகத்தில் வலு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் நல்ல மனோ திடத்துடன் இருப்பார்.

  புத்திர மற்றும் பொருள் காரகனான குரு பகவான் அருளும் " ஆலங்குடி" 
நவக்கிரகங்களில் முழு முதற் சுப கிரகமான " குரு பகவான் " பொன்னிறமானவர். சாத்வீக குணம் கொண்டவர். தேவர்களுக்கெல்லாம் இவரே குரு. கைகளில் யோக தண்டம், வர மித்திரை, அட்சய கமண்டலம் கொண்டு குபேர திசை நோக்கி யோகத்தில் அமர்ந்துள்ளவர். இவர் புத்திர காரகன். பொருள் காரகன். ஆலயங்கள், போதனைச் சாலைகள், உபன்யாசம், புனித இடங்கள், ஆன்மீகத் தொடர்பு போன்றவற்றில் வாசம் செய்பவர். தெய்வ பக்தி, ஆசாரம், புத்தி, யுக்தி, ஞானம், பொறுமை, புகழ் ஆகியவற்றிற்கு இவரே காரகன். ஜாதகத்தில் குரு பார்வை கொண்டே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சூரியனை அடுத்த மிகப் பிரகாசமான கிரகம் குரு. 


   சாயா கிரகமான " ராகு பகவான்" குடி கொண்டுள்ள திருநாகேஸ்வரம்" 
 கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது " ராகு, கேது, நாக தோஷ பரிகார " தலமான " திருநாகேஸ்வரம்". ஒரு சமயம் சுசீல முனிவரால் சாபம் பெற்ற ராகு பகவான், தனது சாபம் நீங்க, சிவ ராத்திரியன்று, முதல் ஜாமத்தில் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் செண்பகாரண்யத்தையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தையும், நான்காம் ஜாமத்தில் நாகை காரோண்யத்தையும் வழிபட்டு, பின்னர் இத் தலம் வந்து ஈசனின் அருளால் சாபம் நீங்க பெற்றார். நந்தி தேவரும், நான்முகனும், சூரியனும், வசிஷ்டரும், இந்திரனும் வழிபட்ட திருத் தலம் இது. 
 நாக ராஜன், தான் வழிபட வேண்டி இறைவனை பிரதிஷ்டை செய்ததாலும், ராகு பகவான் சாபம் நீங்க பெற்றதாலும், இத் தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாக வழிபடப்படுகிறது. நாக ராஜன், தன் இரு தேவியருடன், கோவிலின் தென் மேற்கு மூலையில் அருள்பாளிக்கிறார். இவருக்கு செய்யப்படும் பால் அபிஷேகம், நீல நிறமாக மாறுவது இத் தலத்தின் பெரும் சிறப்பு. ராகு கால வேளைகளில் செய்யப்படும் பாலாபிஷேகம் ராகு, கேது, நாக தோஷங்களுக்கு சிறந்ததொரு பரிகாரமாகும். தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது 

 

 கல்விக்கு அதிபதியாம் "புதன்" குடி கொண்டுள்ள
"திருவெண்காடு"

 கும்பகோணத்தை அடுத்துள்ள சீர்காழியில் இருந்து 17 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது, நவக்கிரக நாயகர்களில் ஞான காராகனான புதன் ஆட்சி புரியும் " திருவெண்காடு ". இத் தலம் பூம்புகாரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், அங்காரகானான செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சுப கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால் ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும். வித்யா காரகனான இவர் நல் விருந்து, பிரசங்கம், ஜோதிடம், வாத நோய், சிற்ப வேலைப்படுகள் ஆகியவற்றின் காரணகர்த்தா. ஞானி, சாந்த சொரூபியான இவர் பார்வை வக்கிரமாகும் பொழுது நரம்பு தளர்ச்சி , பேச்சு திறன் பாதிப்பு, மூளை நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. காவிரி வட கரையில் உள்ள 63 தலங்களில் 11 வது தலம் இது. சமயக் குரவர் நால்வராலும் பாடப் பெற்ற திருத் தலம் இது. காசிக்கு நிகரான தலம். மற்ற தலங்கள் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, சாயாவனம், மற்றும் திருவாஞ்சியம் ஆகும். இத் தல இறைவன் வழிபடுபவரது பாவங்களை போக்குவதால் இத் தலம் பாபநாசபுரம் என்றும் வணங்கப்படுகிறது

   சுப யோக அதிர்ஷ்டங்களை அருளும் சுக்கிரன் குடி கொண்டுள்ள "கஞ்சனூர்"
 தேவர்களின் குருவாக " ஆலங்குடி வியாழ பகவான் " விளங்குவது போல, அசுரர்களின் குருவாக விளங்குபவர் " சுக்கிரன் ". இவர் ஒரு நீர்க் கிரகம், பெண் கிரகம். வெண்ணிறம் கொண்டுள்ளதால் " வெள்ளி " எனவும் அழைக்கப்படுகிறார். சுக்கிரனுக்குரிய தலமான " கஞ்சனூர் " கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், சூரியனார் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் தலம், திருநாவுக்கரசரால் பாடப் பெற்றது. பிற நவக்கிரகங்களை போல இத் தலத்தில் சுக்கிரனுக்கு தனி சந்நதியோ, உருவச் சிலையோ கிடையாது. சிவ பெருமானே இங்கு சுக்கிரனாக காட்சி தருகிறார். சுக்கிரன் சிவனிடம் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். இத் தல இறைவன் " அக்கினீஸ்வரர் " இறைவி " கற்பகாம்பிகை ". பிரம்ம தேவருக்குக் திருமண கோலம் காட்டியதால், இத் தலத்தில் இறைவியை தனது வலப் புறம் மணக் கோலத்தில் கொண்டுள்ளார் ஈசன்.
 வெள்ளிக் கிழமைகள் விரதம் இருப்பதாலும், கஞ்சனூர் சென்று வழிபடுவதாலும், ராஜ ராஜேஸ்வரியை வணங்குவதாலும், வெள்ளி, வைர நகைகள் அணிவதாலும், வெண்ணிற ஆடைகள் உடுத்திக் கொள்வதாலும், மொச்சை தானியத்தை தானமாக தருவதாலும் சுக்கிர தோஷங்கள் நீங்கும். சுக்கிர பகவானின் அருளாசி கிடைக்கும். ஒருவருக்கு விவாக பிராப்தி வேண்டும் என்றாலும், மலட்டு தன்மை நீங்கி புத்திரப் பேறு கிடைக்க வேண்டும் என்றாலும் சுக்கிரனின் அனுக்கிரகம் மிக அவசியம். இவர் தனது நான்கு கைகளில் தண்டம், வரகஸ்தம், கமண்டலம், அஷமாலை கொண்டு விளங்குபவர். வெண்ணிற ஆடையுடனும் , வெள்ளை பூவுடன் காட்சி தருபவர். தனது அதி தேவதையான தேவேந்திரனின் மனைவி இந்திராணியை வழிபட்டால் மிகுந்த மன மகிழ்வு அடைபவர். 

ஞான காரகனான " கேது பகவான் " அருள் புரியும் " கீழப்பெரும்பள்ளம் "
 சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் உள்ளது " கேது பகவான் " அருளாசி புரியும் கேது தோஷ நிவர்த்தி தலமான " கீழப் பெரும் பள்ளம் ". கொள்ளு தானியப் பிரியனான இவன் அசுரர்களில் வலியவன். மனிதற்கு ஏற்படும் தரித்திரம், வியாதிகள், பீடைகள் இவற்றிற்கு காரணகர்த்தா. கதம்ப மலர்ப் பிரியோன் இவன். வைடூர்ய ஆபர்ணன். கஸ்தூரியை சந்தனமாக கொள்பவன். மனிதரது பீடைகள் நீங்க வேண்டுமெனில் கேது பகவானின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும்

புத்திர பாக்கியம் கொடுக்கும் சனி பகவான்

" திருநள்ளாரு" 

 நவக்கிரகங்களில் " ஈஸ்வர " பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான். இவர் ஆயுள் காரகன். சனியின் பலம் கொண்டுதான் ஒருவரது ஆயுள் அமைகிறது. " சனி போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை " என்றனர் ஆன்றோர். பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அளிப்பவர் இவர். ராகு காலம், எம கண்டம் இரண்டுமே சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நேரங்கள். 
 ஒரு கால் ஊனமான இவர், மாங்கல்ய காரகராவார். புத்திர பாக்கியம் கொடுப்பவர். மனிதரது வாழ்வில் ஏழரைச் சனி மூன்று முறை வரலாம். முதலில் வருவது " மங்கு சனி " இரண்டாவதாய் வருவது " பொங்கு சனி". மூன்றாவதாய் வருவது " மாரகச் சனி". பாலைவனம், மயான பூமி, பாழடைந்த கட்டிடங்கள், புதையுண்ட இடங்கள் இவை யாவும் சனி வாசம் செய்யும் இடங்களே. மனித உடலில் சிறுநீர்ப்பை, பற்கள், எலும்புகள், காதுகள், மண்ணீரல் போன்றவை சனியின் ஆதிக்கம் பெற்றவை. இரும்பு, எண்ணெய், கருப்பு தானியங்கள், புதையுண்ட பொருட்கள் ஆகியவற்றிற்கு இவரே காரணகர்த்தா .
சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, நல்லெண்ணெய் கொண்டு இரு விளக்குகளை சனி பகவான் சந்நதியில் ஏற்றி வைத்து, எள் சாதம் நைவேத்யம் வைத்து மனமுருகி சனி பகவானை வழிபட வேண்டும். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர், எனவே சனி கவசம் சொல்வது சிறந்த பலன் அளிக்கும். 
 திருநள்ளாரு சென்று கருப்பு வஸ்திரம் அணிந்து நள தீர்த்ததில் நீராடி, வஸ்த்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு, வேறு உடை அணிந்து, தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபட வேண்டும். கருப்பு வஸ்திரங்களை ஏழைகளுக்கு தானம் தரலாம். 


 
பூமி மற்றும் சகோதர காரகனான, "செவ்வாய்" உறையும் "வைதீஸ்வரன் கோயில்"

 செவ்வாய் எனும் " அங்காரகன் " ஆட்சி புரியும் தலமாக விளங்குவது " வைத்தீஸ்வரன் கோவில் ". கும்பகோணத்தை அடுத்த மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவ பெருமானின் வியர்வை துளியில் இருந்து தோன்றினார் அங்காரகன். அங்காரகன் செங்குஷ்டம் கொண்டிருப்பதை கண்ட ஈசன், வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி வழிபட சொன்னார். அங்காரகனும் அவ்வாறே செய்ய அவரது செங்குஷ்டம் நீங்கியது. இறைவனிடம் தன்னை செவ்வாய் கிழமைகளில் வழிபடுவோருக்கு சகல செல்வங்களையும், சற்புத்திர பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். சிவ பெருமானும் " செவ்வாய் கிழமைகள் உனை துதிப்போர் அனைவரும் கிரக தோஷங்கள் விலகி நன்மை அடைவர். நீ நவக்கிரகங்களில் மூன்றாவதாய் திகழ்வாய் " என வரமளித்தார்.
வைத்தீஸ்வரன் கோவிலில் மூலவர் சந்நதிக்குள் நுழைந்தவுடன், தண்டாயுதபாணி சந்நதிக்கு தெற்கில் தெற்கு முகமாக அமிந்துள்லது அங்காரகன் சந்நதி. தனது நான்கு கைகளிலும் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கியபடி காட்சி தருகிறார் செவ்வாய். செவ்வாய் தோஷம் உள்ள அனைவரும் இத் தலம் வந்து துவரை அன்னம் நைவேத்யம் செய்து இவரை வழிபடவேண்டும். இவர் அனுக்கிரகம் கிட்டினால் தோஷ நிவர்த்தி பெற்று, மணவினை பெறலாம் அன்பது திண்ணம். இத் தல வழிபாடு கோள் வினைகள், வாத நோய், பேய் பிசாசு வாதனைகள், கிரக பீடை, சொறி சிரங்கு, குஷ்ட நோய், சித்த பேதம், வெப்பு நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்க வல்லது. இங்கு விற்கப்படும் " வைத்தியநாதர் மருந்து " என்ற திருச்சாந்துருண்டையை உண்ண சகல நோய்களிலுமிருந்தும் நிவாரணம் பெறலாம்.

0 comments:

Post a Comment