ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்
.
விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.
எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும்
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.
வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்
விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்
0 comments:
Post a Comment