கணபதி ஹோமம்

கணபதி ஹோமத்தின் முக்கியத்துவம்


ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில்தான் நடத்த வேண்டும். அப்படித்தான் பழங்காலத்தில் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக செங்கரும்பு, செவ்வாழை விளைந்த நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, பசுவைக் கொண்டு சுத்தப்படுத்தி (அதாவது பசுவை வலம் வரச் செய்தல்), அதன் பின்னர் யாக குண்டம் அமைத்து ஹோமம் செய்வதுதான் முறையானது.
தற்போது சிமெண்ட் அல்லது டைல்ஸ் தரையின் மீது வீடு கட்டுவதற்கு பயன்படுத்தும் மணலைப் பரப்பில், செங்கற்களை அடுக்கி பெயருக்கு ஹோமம் செய்கின்றனர். 
புது வீடு அல்லது அலுவலகத்திற்காக குடிபுகும் போது கணபதி ஹோமம் செய்ய வேண்டும்
வினைகளை தீர்க்கக் கூடியவர் விநாயகர் என்பது ஐதீகம். விநாயகர் உருவமற்றவர். இதற்குக் காரணம் மஞ்சளைப் பிடித்து வைத்து கூட விநாயகராக வணங்கலாம். பழங்காலத்தில் பசும் சாணத்தை விநாயகராகப் பிடித்து வழிபட்டுள்ளனர். பசுவின் சாணத்தை தேவப்பிரசாதம் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.
நிலத்தில் படாமல் புல், செடி கொடிகளின் மேல் விழும் காராம்பசுவின் சாணத்தை பஸ்பமாக்கி, அதனை நெற்றியில் விபூதி போல் பூசினால் அது நோய்களைத் தீர்க்கும் மருந்தாக விளங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சைனஸ், சளித் தொந்தரவுகளுக்கு இது நல்ல பலனை அளிக்கும்.
கிரகப் பிரவேசத்தின் போது, வெற்றிலையின் மேல் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, விநாயகர் அகவலைப் பாடி, தாராளமாக கிரஹப் பிரவேசம் செய்யலாம். எனவே, கணபதி ஹோமம் செய்து விட்டுதான் கிரஹப் பிரவேசம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.
விநாயகரை மனதார வழிபட்டாலே முழுமையான பலன்களை எதிர்பார்க்கலாம். கணபதி ஹோமம் செய்யவில்லை என்பதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் விநாயகரை வணங்கி விட்டுத் துவங்க வேண்டும். அதற்கு இதெல்லாம் எளிய முறைகள்.
நல்ல முகூர்த்த தினத்தில் கணபதி ஹோமம் செய்ய குருக்கள் கிடைக்கவில்லை என்றால், மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி விநாயகரை வணங்கலாம். புதிய வீட்டில் குடிபுகுந்த பின்னர் 2 அல்லது 3 மாதம் கழித்து கணபதி ஹோமம் செய்தாலும் தவறில்லை.
எனவே, பசுவின் சாணத்தையும், அருகம்புல்லையும் விநாயகராகப் பிடித்து, தெரிந்த விநாயகர் மந்திரங்களை சொல்லி வழிபட்ட பின்னர் பால் காய்ச்சி குடிபுகுந்தாலும் எந்த பாதிப்பும் வராது.

0 comments:

Post a Comment