அட்சய திருதி

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி சிறப்பு வாய்ந்தது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியைதான் அட்சய திருதியை எனப்படுகிறது. இந்த ஆண்டில் அட்சய திருதி மே  மாதம் 5 , 6 ம்  தேதி வருகிறது. அட்சயம் என்றால் வளருதல், அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்துகொண்டே இருத்தல். அட்சய பாத்திரம் என்பதுபோல. அன்றைய தினம் செய்கிற எந்த காரியமும் வளர்ந்துகொண்டே இருக்கும், வெற்றிகரமாக நடந்து முடியும் என்பது வேத வாக்கு. 
         நாம் எது செய்தாலும் அதை ஒன்று பல மடங்காக பெருக்கி நமக்கு வளமும் நலமும் சேர்க்கும் திருநாள்தான் அட்சய திருதியை. இந்த நன்னாளில் தங்க நகை, ஆடை, அணிகலன்கள், ஆடம்பர பொருட்கள்தான் வாங்க வேண்டும் என்று இல்லை. அது சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட வழக்கம்தான். வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், மங்கள காரியங்களுக்கு தேவையான பொருட்கள், புதிய தொழில், வியாபாரத்துக்கு தேவையான கருவிகள், சாதனங்கள் என எது வேண்டுமானாலும் வாங்கலாம். அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த நன்னாளில் பிள்ளையார்சுழி போடலாம். புதுக்கணக்கு ஆரம்பித்தல், வங்கியில் பணம் செலுத்துதல், கல்வி துவக்கம், விரதம் ஆரம்பித்தல், புகழ்பெற்ற கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருதல். சொந்த பந்தங்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினருக்கு விருந்து, பரிசு அளித்து உறவு பாராட்டுதல், கஷ்டப்படுவோருக்கு உதவிகள் செய்தல், அன்னதானம், தானதர்மங்கள் செய்தல் இன்னும் விசேஷம். இதில் முக்கியமாக நோயாளிகளுக்கு உதவுவது மிகச் சிறந்த தர்மமாக சொல்லப்பட்டுள்ளது. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் உத்தமமான பலன்களை தரும். ‘பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்’ என்று சிறப்பித்து கூறுகிறது ரமண வாக்கியம்.


             அட்சய திருதியை பற்றிய புராணக் கதைகளும் உண்டு. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால்ய நண்பர் குலேசன் வறுமையில் வாடுகிறார். உதவிகள் கேட்டு வரலாம் என்று அவரை சந்திக்க ஒரு பிடி அவலை மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார். அவரை நன்கு உபசரித்த கிருஷ்ண பரமாத்மா அவர் அன்போடு கொண்டுவந்த அவலை ஆசையோடு வாயில் எடுத்துப் போடுகிறார். நட்பு, அன்பு கலந்த அவலின் ருசியில் மகிழ்ந்துபோன கிருஷ்ணன், “அட்சயம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தி அனுப்புகிறார். இன்னொரு கவளம் அவல் தின்னவிடாமல் கிருஷ்ணனை தடுக்கிறாள்

லட்சுமியின் அம்சமான ருக்மணி. காரணம் கேட்கிறார் கிருஷ்ணன். “அன்புடன் கொடுத்த அவலை ஒரு பிடி தின்றதற்கே குசேலனின் குடிசை வீட்டை மாட மாளிகையாக மாற்றி சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கிவிட்டீர்கள். இனியும் ஒரு பிடி தின்றால் லட்சுமி தேவியான நானே குலேசன் வீட்டுக்கு போய்விட வேண்டியதுதான்” என்கிறாள். குலேசன் கேட்காமலேயே அவருக்கு அனைத்து ஐஸ்வர்யங்களையும் செல்வச் செழிப்பையும் கொடுத்து அருளியவன் கண்ணன். வீடு திரும்பிய பிறகுதான் இவை அனைத்தும் குசேலனுக்கு தெரியவருகிறது. கண்ணனின் அன்பை நினைத்து வியக்கிறார். அவருக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்த தினமே அட்சய திருதியை.

       கவுரவர்கள் சபையில் திரவுபதியின் துகிலுரியப்பட்டபோது ஆடைகளாக அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்த நாளே என்கிறது வியாச புராணம். அப்போதும் “அட்சய” என்று சொல்லியே ஆடைகளை பெருக்கெடுக்கச் செய்துள்ளார் கண்ணன். மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்த நாள், தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்தது, திரவுபதிக்கு சூரியன் அட்சய பாத்திரம் அளித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி, பத்ம நிதி ஆகிய நிதிகளை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வல மார்பினில் மகாலட்சுமி இடம்பிடித்த நாள் என அட்சய திருதியைக்கு பல்வேறு பெருமைகள் கூறப்படுகின்றன.

            ஸ்ரீ என்பது லட்சுமியை குறிக்கும், வைகுண்டத்தில் மகாலட்சுமியாக, பாற்கடலில் ஸ்ரீதேவியாக, இந்திரனுடைய இடத்தில் சுவர்க்க லட்சுமியாக, அரசர்களிடத்தில் ராஜலட்சுமியாக, குடும்பத்தில் கிரக லட்சுமியாக, வீரர்களிடத்தில் தைரிய லட்சுமியாக, பசுக்களிடத்தில் காமதேனுவாக சகல யோகங்களை வாரி வழங்கும் ஆதார சக்தியான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறப்பானது.

வேறு என்ன செய்யலாம்?

தீராத வியாதியுள்ளவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து தங்களுக்கு தெரிந்த மந்திரம் அல்லது நாம ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் தீரும். கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி, பாலாரிஷ்ட தோஷங்கள் கழியும். சகல தடங்கல், தடைகள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளையும் அழித்து வளமும் நலமும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திர ஹோமத்தை வீட்டில் செய்யலாம். வாழ்வு வளம் பெற தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும், தயிர் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். இனிப்பு வழங்குவதால் திருமணத் தடை நீங்கும். அரிசி, பருப்பு, தானியங்கள் தருவதால் விபத்துக்கள் நேராமல் இறைவன் காத்தருளுவார். பசுக்கள், பட்சிகள், நாய்களுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். தர்ம குணம் மேலோங்கும்

0 comments:

Post a Comment