ஷஷ்டி விரதம்

                                கந்த ஷஷ்டி விரத மகிமை


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
 
முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.
இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.
முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.

விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்
சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

சண்முக தத்துவம் என்ன ?


ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,

நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.



சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
ஞானம் அருள ஒரு முகம்
அக்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.

 
ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்

வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம்  ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.


ஓம் நம: ஸரவணபவாய என்பது ம்
குஹ தசாக்ஷரம்.
ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம்

0 comments:

Post a Comment